×

முடிவுக்கு வராத ஆம்னி பேருந்து கட்டணம்: நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் தண்டம் விதிக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தீபாவளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத் தயாராக இருக்கும் நிலையில், அவர்களின் தேவைகளை பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் பயணக் கட்டணத்தை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தியுள்ளன.

சென்னையிலிருந்து நாளை மதுரை செல்வதற்கான கட்டணம் ரூ.3200, நெல்லைக்கான கட்டணம் ரூ.3400, கோவைக்கான கட்டணம் ரூ.3999 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளி திருநாள் நிறைவடைந்து வரும் 13-ம் நாள் மேற்கண்ட நகரங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கான கட்டணம் இன்னும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.4950 கட்டணம் நிர்ணயிக்கப்படுள்ளது.

நெல்லையிலிருந்து சென்னைக்கு ரூ.4120, கோவையிலிருந்து சென்னைக்கு ரூ.4950 கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆம்னி பேருந்து முன்பதிவுக்கான இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் தண்டம் விதிக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post முடிவுக்கு வராத ஆம்னி பேருந்து கட்டணம்: நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! appeared first on Dinakaran.

Tags : Anbumani Ramadoss ,Tamilnadu government ,Chennai ,Tamilnadu govt ,Dinakaran ,
× RELATED ஆந்திராவில் வன்னியர் சங்கத்தினர்...